News - கோடையை சமாளிக்க
கோடை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் பகல் நேரங்களில் அனல் வாட்டி எடுக்கிறது. பலரும் வெயிலை தணித்துக் கொள்ள குளிர்ந்த நீரைக் குடிப்பதும், குளிர்பானங்களை அருந்துவதுமாக உள்ளனர். இதனைத் தவிர்த்து, அதிகமாக தண்ணீர் குடிப்பதும், பழச்சாறுகளைக் குடிப்பதும் நல்லது.
கோடையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு முறைகளைக் கையாள்வோம். கோடையில் உடலை பாதுகாக்க எல்லோரும் பின்பற்றக் கூடியதும், எளிதானதுமான முறை பழங்களும், பழச்சாறும்தான். அதாவது பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையும், சுவையும் கோடைக்கு நல்ல வரப்பிரசாதமாக அமையும்.
பழங்களையும், பழச்சாறுகளையும் அவ்வப்போது சாப்பிடுவதால் வியர்வையால் உடல் இழக்கும் நீர் ஈடு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு சிறப்புத் தன்மையைப் பெற்றிருக்கும், அந்த பழங்களை சாப்பிடும் போது அந்த பழத்தின் சத்து நமது உடலுக்குக் கிட்டுகிறது.
தற்போது மாம்பழ சீசனாக இருந்தாலும் மற்ற வகைப் பழங்களும் கிடைக்கின்றன. மாதுளம் போன்ற ஒரு சில பழங்கள்தான் விற்பனைக்கு குறைவாக வருகின்றன. தவிர, திராட்சை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவை அதிகமாக விற்பனைக்கு வருகின்றன. முக்கியமாக ஆரஞ்சு பழம் தற்போது சீசன்தான். எனவே ஆரஞ்சு பழத்தை வாங்கி வந்து சாறு பிழிந்து குடிக்கலாம்.
நாம் வீட்டில் ஆரஞ்சு பழம், திராட்சை போன்றவற்றை சாறு பிழிந்து குடிப்பதன் மூலம், வெளியில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
திராட்சை பழச்சாறு கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கும். கோடையில் ஏற்படும் உடற்சூடு, நீர்க் கடுப்பு, வெட்டை சூடு, ஜீரண கோளாறுகளுக்குத் திராட்சை பழச்சாறு மருந்தாகவும் அமையும்.
முலாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் குளிர்ந்த நீரையும், சர்க்கரையும் சேர்த்து குடிப்பது வெயிலுக்கு இதமாக இருக்கும். முலாம்பழச் சாறு நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். உண்மையில் முலாம்பழத்தில் தர்ப்பூசணியைவிட நீர்த் தன்மை அதிகம். எனவே முலாம்பழச்சாற்றை தினமும் ஒரு வேளை அருந்தி வந்தாலே கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
மாம்பழச்சாறு உடலுக்கு சூட்டை உண்டாக்கும் என்றாலும், அதனை பக்குவமாக சாறெடுத்து குடிப்பது நல்லதுதான். கோடை மயக்கத்தை நீக்கும் ஆற்றல் மாம்பழச் சாறுக்கு உண்டு.
இதேப்போன்று ஆப்பிள் பழச்சாறு, பப்பாளிச் சாறு, சப்போட்ட பழச்சாறு, தர்பூசணிச் சாறு, பழக் கலவைகளைக் கொண்டும் பழச்சாறு தயாரித்து வீட்டில் உள்ளவர்கள் அருந்தி வரலாம்.
இது மட்டுமல்லாமல், எலுமிச்சை சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. குளிர்ச்சியை அளிப்பதோடு உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். எலுமிச்சம் பழத்தை வெதுவெதுப்பான நீரில் சாறு பிழிந்து, குளுகோஸ் மற்றும் தேன் கலந்து குடிக்க, சுவையும் கூடும். உடம்பிற்கும் நல்லது.
இரண்டு முன்று பழச்சாறுகள் கலந்து பழச்சாறு செய்யும்போது, இரண்டு தேக்கரண்டி இஞ்சிசாறு விட்டுப் பருகுங்கள். சுவை நன்றாக இருக்கும்.
பழங்கள் மட்டுமல்லாமல் இளநீர், தயிர், மோர் போன்றவற்றையும் கோடையில் தாராளமாக நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இள சான நுங்குகளை, தோல் நீக்கி பாத்திரத்தில் போட்டு கையிலேயே மசித்து அத்துடன் பால் சேர்த்து ஏலக்காய், சர்க்கரை கலந்து சிறிது குளிர்ந்த நீர் விட்டு பருகினால் சுவை பிரமாதமாக இருக்கும். நுங்கே அருமையாக இருக்கும். நுங்கச் சாறு எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும். முயற்சித்துப் பாருங்கள்.
வீட்டில் இளநீர் எளிதாக கிடைக்கும் என்றால் காலையில் ஒரு சில இளநீரை உடைத்து அதில் இருந்து நீர் எடுத்து அத்துடன் சிறிது உப்பு, எலுமிச்சை சாறைக் கலந்து குளிர்பதனப் பெட்டியில் வைத்து விடுங்கள். அவ்வப்போது குடித்து வாருங்கள். நீர் சுருக்கு என்பதோ, அக்னிக் கொப்புளங்களோ உண்டாகாது. புதினா சுவை பிடித்தவர்கள் இளநீருடன் ஒரு சில புதினா இலைகளையும் போட்டு வைக்கலாம்.
வெறும் மோரைச் செய்து குடிக்காமல், மோரில் சிறிது கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்த்து குடிப்பது நல்லது.
வீட்டில் ஒரு பாத்திரத்தில் நீர் அதிகமாக விட்டு மோரைக் கலந்து வைத்து விடுங்கள். தேவைப்படும் போது தேவைப்படுபவர்கள் எடுத்துக் குடித்துக் கொள்வார்கள்.
வெள்ளரிக்காயில் பெரிதாக எந்த சத்துக்களும் இல்லாமல் இருந்தாலும், அதிலுள்ள நீர்த் தன்மை ஜீரண சக்தியை சீராக்க உதவுகிறது. மேலும், வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசிய உப்பு சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவுகிறது.
காலையில் எழுந்ததும் வெள்ளரிக்காய்த் துண்டுகளை மோரில் போட்டு அதனுடன் சிறிது கொத்துமல்லி, இஞ்சி போட்டு வைத்து விடுங்கள். இந்த மோரை அவ்வப்போது பருகி வந்தால் சிறுநீரகத் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காயை துண்டுகளாகப் போட்டு சாப்பிடுவதும், கண்களின் மீது வைப்பதும் நல்லது என்பதை நீங்களே அறிவீர்கள்.
வீட்டில் குளிர்பதனப் பெட்டி இல்லையே என்று கவலைப் பட வேண்டாம். எளிய, மின்சாரச் செலவு இல்லாத குளிர்பதனப் பெட்டி பானைதான். ஒரு நல்ல பானையை வாங்கி வந்து அதில் நீர் ஊற்றி மணல் மீது வைத்து விடுங்கள். வீட்டிற்கு வருவோருக்கு பானை நீரைக் கொடுத்துப் பாருங்கள். உங்களை மனமார புகழ்வார்கள்.
For more info : vsudhir27@hotmaiol.com
Report Abuse